மனநிலை பாதிக்கப்பட்டவரை பேச வைத்து எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட பெண் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.!
தேனி மாவட்டம் கம்பம் அருகே மனநலம் பாதிக்கப்பட்டவரை விசாரணை என்ற பெயரில் பேச வைத்து, வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிய பெண் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன் பழனிசெட்டிப்பட்டியிலுள்ள வீடு ஒன்றில் திருட முயன்றதாக ஒரு நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் சம்மந்தமே இல்லாமல் ஏதேதோ பேசிய அந்த நபர், போதைக்கு அடிமையாகி, மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் என்பது தெரியவந்தது.
சாவியுடன் யாராவது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்து இருந்தால் அதை திருடி ஓட்டுவதும், பெட்ரோல் தீர்ந்து போனாலோ, பழுதாகி விட்டாலோ எங்காவது நிறுத்திவிட்டுச் செல்வதையும் வழக்கமாக வைத்திருந்துள்ளார்.
திறந்து கிடக்கும் வீடுகளுக்குள்ளும் சென்று உரிமையாளர் போல் நடந்துகொள்வதும் அவரது வழக்கமாக இருந்துள்ளது.
இந்த நிலையில், அவரது பேச்சை வீடியோவாகப் பதிவு செய்த பழனிசெட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் மதனகலா, அதனை சமூக வலைதளங்களிலும் பதிவேற்றினார்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்த நிலையில், மதனகலா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
Comments